வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,473 ஆக உயர்வு
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வேலூர்,
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் 2 மாவட்டங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,473 ஆக உயர்ந்தது.
கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா தொற்று பாதித்த நபர்கள் வசித்த வீடுகள் மற்றும் அந்த தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கிறார்கள். மேலும் சிறப்பு வாகனங்கள் மூலம் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் நபர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் சளிமாதிரி பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் குடும்பத்தினர், அவருடன் பழகிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
146 பேருக்கு பாதிப்பு
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேலூர் கஸ்பாவில் ஒருவயது பெண் குழந்தை, ஒரே குடும்பத்தில் 3 பெண்கள், மற்றொரு குடும்பத்தில் 2 பெண்கள், சைதாப்பேட்டையில் 3 வயது பெண்குழந்தை, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது ஆண்குழந்தை, முத்துமண்டபத்தில் 3 குழந்தைகள், பாரீஸ் குடியிருப்பில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும், கொசப்பேட்டையில் 80 வயது மூதாட்டி, வேலப்பாடியில் 85 வயது முதியவர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 146 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகினது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 146 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்களிடையே தொற்று அதிகமாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயன்றும் வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,860 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story