லடாக் எல்லைக்கு தளவாடங்களை கொண்டு சென்றபோது வாகன விபத்தில் தேனி ராணுவ வீரர் பலி


லடாக் எல்லைக்கு தளவாடங்களை கொண்டு சென்றபோது வாகன விபத்தில் தேனி ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 10 July 2020 11:44 PM GMT (Updated: 10 July 2020 11:44 PM GMT)

ஒடிசாவில் இருந்து லடாக் எல்லைக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்றபோது வாகன விபத்தில் சிக்கி தேனி ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 43). ராணுவ வீரரான இவர், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் புவனேஷ்வரில் இருந்து ராணுவ தளவாடங்களை, வாகனத்தில் (டிரக்) ஏற்றிக்கொண்டு லடாக் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு, நேற்று முன்தினம் வாகனம் புறப்பட்டது. இதில் அழகுராஜா டிரைவராகவும், அவருடன் 2 ராணுவ வீரர்களும் சென்றனர்.

நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் சுட்டுப்பாலு என்ற இடத்தில் மலைப்பாதையில் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த வாகனம், அங்குள்ள பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த மற்ற 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் மற்றும் ராம்கர் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அழகுராஜா இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே அழகுராஜாவின் உடல், விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து, அவரது சொந்த ஊரான துரைசாமிபுரத்துக்கு வாகனத்தில் அழகுராஜாவின் உடல் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் இன்று (சனிக்கிழமை) உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இது தொடர்பாக அவரது உறவினர்கள் கூறும்போது, “அழகுராஜா 15 வருடமாக ராணுவத்தில் இருக்கிறார். விடுமுறைக்கு வந்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் தான் பணிக்கு திரும்பினார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவத்தால் துரைசாமிபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. அழகுராஜாவுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகளும், 9 வயதில் மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story