இரவு 8 மணி வரை கடைகளை நடத்திக்கொள்ளலாம்: சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்படும் எனவும் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
தமிழக அரசு அறிவித்தபடி இரவு 8 மணி வரை கடைகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்படும் எனவும் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
வணிகர்களுக்கான கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் தற்போதுள்ள சூழலில் கடைகளை திறந்து வைப்பதற்கான நேரத்தை குறைப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வணிகர்கள் மத்தியில் கலெக்டர் மெகராஜ் விளக்கி பேசினார். மேலும் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்கிற தமிழக அரசின் உத்தரவை கடைபிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் 15 நாட்களுக்கு மூடப்படும் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
கலெக்டர் பேட்டி
அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்களாகவே முன்வந்து கடைகளை மாலை 5 மணிக்கு மூடுவதாக கூறி கடைகளை அடைத்து வந்தனர். ஆனால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால், மாலை 6 மணிக்கு கடைகளை மூடிக்கொள்வதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
கடைகளை இரவு 8 மணி வரை திறந்து வைக்க தமிழக அரசே அறிவித்துள்ளதால், 8 மணி வரையே கடைகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு அறிவுறுத்தியபடி முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைகளுக்குள் கடைபிடிக்க வேண்டும் எனவும் வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடைகளுக்கு முன் கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றை பின்பற்றாதது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்கு ‘சீல்‘ வைக்கப்படும். வணிகர்கள் தானாக முன்வந்து கடைகளை முன்னதாகவே அடைத்துக்கொண்டாலும் அது வரவேற்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் கூறினார்.
Related Tags :
Next Story