சிறுவனின் சிதைந்த முகம் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்களுக்கு பாராட்டு
சிறுவனின் சிதைந்த முகம் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது: இதனால் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் கரியமங்கலம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தீபக் கடந்த 5-ந்தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வனப்பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கத்திரிக்காய் என நினைத்து வாயில் வைத்து கடித்துவிட்டான். இதில் அந்த வெடிகுண்டு வெடித்ததில் தீபக்கின் வாய், தாடை மற்றும் கை உள்ளிட்ட பகுதிகள் சிதைந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக 6-ந்தேதி அதிகாலை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் டாக்டர் வேல்முருகன் தலைமையில் டாக்டர்கள் செந்தில்குமார், விவேக், ஜீவரதி, தனலெட்சுமி, சுரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சிதைந்த பாகத்தை சரிசெய்தனர். கொரோனா சிகிச்சை பரபரப்புக்கு மத்தியிலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சிறுவனை நலமடைய செய்த டாக்டர்கள் குழுவினரை மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரெமா சந்திரமோகன் வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story