திருச்சி கே.கே.நகரில் 300 கடைகளின் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
திருச்சி கே.கே.நகரில் 300 கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
கே.கே.நகர்,
திருச்சி கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து உடையான்பட்டி ரெயில்வே கேட் வரை உள்ள ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் கடைகளும், சில வீடுகளும் உள்ளன.
திருச்சி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலையின் ஓரமாக கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு படிக்கட்டுகள், கட்டிடங்கள், சிமெண்டு திண்ணைகள், நிழற்கூரைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை விரிவாக்கம் செய்ய, ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பை ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று திருச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி பொறியாளர் வீரமணி ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களை கொண்டு, கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து உடையான்பட்டி ரெயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் 6 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
இதையொட்டி கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.சில கட்டிடங்கள் பாதியளவு நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. அவை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சில இடங்களில் கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 300 கடைகளின் ஆக்கிரமிப்புகள் நேற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடையான்பட்டி ரெயில்வே கேட் அருகில் 10 குடும்பத்தினர் முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளனர். அவர்கள், 10 நாட்கள் அவகாசம் கேட்டு கொண்டதன்பேரில் அவை நேற்று இடிக்கப்படவில்லை.
இதேபோல 3 கடைகள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளது. கடைகளில் உள்ள பொருட்களை எடுக்க வேண்டி, உரிமையாளர்கள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story