கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 11 July 2020 9:40 AM IST (Updated: 11 July 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது. அதுபோன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 31 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அந்தப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்வதை தடுக்கவும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து இதுவரை தனிமைப்படுத்தப் பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 6 ஆயிரத்து 980 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் முகாம் மூலம் இதுவரை மொத்தம் 68 ஆயிரத்து 490 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதுடன், அருகில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சத்து மாத்திரை தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story