ராமநாதபுரம், சிவகங்கையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 157 பேருக்கு கொரோனா தொற்று


ராமநாதபுரம், சிவகங்கையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 157 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 July 2020 4:23 AM GMT (Updated: 11 July 2020 4:23 AM GMT)

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியான நிலையில் டாக்டர் மற்றும் 4 போலீசாருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,606 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் 16 பேருக்கும், ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் 11 பேருக்கும், பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் 13 பேருக்கும், கடலாடி சுற்று வட்டார பகுதியில் 13 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 38 பெண்கள் உள்பட 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கமுதி ஆயுதப்படையை சேர்ந்த 2 காவலர்கள், ராமநாதபுரம் ஆயுதப்படை 2 காவலர்கள், சத்திரக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என 5 பேருக்கும், கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடலாடி, பரமக்குடி பகுதிகளில் அதிக அளவில் தொற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர நயினார்கோவில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் யூனியன் அலுவலகம் மூடப்பட்டது. காவலர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் என அடுத்தடுத்த பலரும் பாதிக்கப்பட்டு வருவதால் அனைவரிடமும் கொரோனா தொற்று அச்சம் தீவிரம் அடைந்துள்ளது.

பரமக்குடி காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்த 78 வயது நபர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கையை சேர்ந்த 4 ஆண்கள், பாகனேரியை சேர்ந்த ஒரு பெண், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த ஒரு பெண், பரமக்குடியை சேர்ந்த ஒரு பெண், திருப்புவனத்தை சேர்ந்த ஒரு ஆண், பெரியகோட்டையை சேர்ந்த ஒரு ஆண், தேவகோட்டையை சேர்ந்த ஒரு ஆண், காளையார்கோவிலை சேர்ந்த 2 ஆண், குமாரவேலூரை சேர்ந்த ஒரு பெண், சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story