2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு: சேலம் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
2 ஊழியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகம் 2 நாட்கள் மூடப்பட்டது.
சேலம்,
2 ஊழியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகம் 2 நாட்கள் மூடப்பட்டது. இதையொட்டி அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் வசிக்கும் இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பரிசோதனை செய்து கொள்ள கலெக்டர் ராமன் உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது
இதனிடையே, கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நுழைவு வாயிலில் உள்ள மெயின் கதவு பூட்டப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் (ஞாயிற்றுக் கிழமை) கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, சமூகநலத்துறை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை உள்ளிட்ட 4 தளங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பரபரப்பு
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்திலேயே சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டு அனைத்து துறை அலுவலகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story