சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இளம்பெண் பலி போலீஸ் ஏட்டு, சிறை வார்டனுக்கு தொற்று
சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இளம்பெண் பலியானார். போலீஸ் ஏட்டு, சிறை வார்டன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இளம்பெண் பலியானார். போலீஸ் ஏட்டு, சிறை வார்டன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 1,630 பேர் வரை இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 9 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் தான் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் சேலத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இறந்த இளம்பெண் வசித்து வந்த பகுதியில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வலிப்பு
இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் கூறும்போது, வாழப்பாடி பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வாழப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பரிசோதனையில் தான் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.
போலீஸ் ஏட்டு, வார்டன்
இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏட்டுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அம்மாபேட்டை போலீஸ் நிலையம் மற்றும் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடன் பணியாற்றிய வார்டன்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story