கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2020 4:15 AM IST (Updated: 11 July 2020 11:32 PM IST)
t-max-icont-min-icon

வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

அரசு திணறி வருகிறது

கர்நாடகத்தில் கொரோனா தனது கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினமும் ஆயிரத்தை தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறது. நகரில் எந்தவித வெளித்தொடர்பும் இல்லாதவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் நகரில் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இதை கட்டுப்படுத்த முடியாமல் கர்நாடக அரசு திணறி வருகிறது. நாட்டில் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்படும் மாநிலங்களின் வரிசையில் கர்நாடகம் சேர்ந்துள்ளது. மேலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஆமதபாத் நகரங்களின் வரிசையில் பெங்களூரு இடம் பிடித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழு, முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பெங்களூருவில் கொரோனாவை தடுக்க வேண்டுமெனில் மீண்டும் நகரில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.

நிபுணர் குழுவின் அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. முதல்- மந்திரி எடியூரப்பா, பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகரில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசிய சேவைகள்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 14-ந் தேதி இரவு 8 மணி முதல் 22-ந் தேதி காலை 5 மணி வரை 7 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்குழுவின் ஆலோசனைபடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.

மேலும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ தேர்வுகள், மருத்துவ மேல்படிப்பு தேர்வுகள் நடைபெறும். அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். மேலும் அரசு வெளியிடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனாவை தடுக்க பகல்-இரவாக பணியாற்றி வரும் ஆஷா மருத்துவ ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள், போலீசார், தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டடோருக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த ஊரடங்கிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

14-ந் தேதி முதல் ஊரடங்கு என்று சொல்லப்பட்டாலும், அன்று இரவு 8 மணி வரை வழக்கமான பணிகள் தொடர்ந்து நடைபெறும். 15-ந் தேதி முதல் ஊரடங்கு தொடங்குகிறது. அதே போல் 22-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு 22-ந்தேதி காலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கு நிறைவடைந்து அன்றைய தினம் பெங்களூருவில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கும். ஆகமொத்தம் 7 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story