குண்டும் குழியுமாக கிடக்கும் சாத்தான்குளம்-நெல்லை சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குண்டும் குழியுமாக கிடக்கும் சாத்தான்குளம்-நெல்லை சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2020 4:00 AM IST (Updated: 12 July 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

குண்டும் குழியுமாக கிடக்கும் சாத்தான்குளம்-நெல்லை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சாத்தான்குளம்,

குண்டும் குழியுமாக கிடக்கும் சாத்தான்குளம்-நெல்லை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பிரதான சாலை

நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்குளம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்கு வரும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அமைக்கப்பட்டது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது.

குறிப்பாக, செட்டிகுளம் அருகே இருந்து அமுதுன்னாங்குடி வழியாக சாத்தான்குளத்துக்கு வரும் பாதையில் கல்குவாரிகளில் இருந்து கல் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் அந்த சாலை முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. அமுதுன்னாங்குடி முதல் பன்னம்பாறை விலக்கு வரை சாலையில் பள்ளங்கள் அதிகளவில் உள்ளது.

கோரிக்கை

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிந்தாமணி சாலை

இதேபோல் சின்னமூலைக்கரைப்பட்டியில் இருந்து சிந்தாமணி, மீரான்குளம் வழியாக பேய்குளம் செல்லும் சாலையிலும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் அந்த சாலை சின்னமூலைக்கரைப்பட்டியில் இருந்து சிந்தாமணி வரையிலும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதில் 4 இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் குழிகள் உள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த குழியில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அந்த குழியில் முள்செடியை வெட்டி போட்டு உள்ளனர்.

சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், இல்லாவிட்டால் மூலைக்கரைப்பட்டியில் போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story