எம்.எல்.ஏ. பதவி பறிப்பு விவகாரம்: வாய்ப்புகள் அளித்தும் தனவேலு விளக்கமளிக்க தவறினார் சபாநாயகர் பேட்டி
வாய்ப்புகள் அளித்தும் விளக்கமளிக்க தவறியதால் தனவேலுவின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார்.
புதுச்சேரி,
வாய்ப்புகள் அளித்தும் விளக்கமளிக்க தவறியதால் தனவேலுவின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக போராட்டம்
புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாகூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனவேலு எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலுக்குப்பின் கடந்த 28.5.2016-ல் நடந்த முதல்-அமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு நாராயணசாமியை முதல்-அமைச்சராக்க விருப்பம் தெரிவித்தவர்களில் அவரும் ஒருவர்.
திடீரென்று கடந்த 13.1.2020 அன்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதுச்சேரி கவர்னரை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியைப்பற்றி குறை கூறினார். முதல்-அமைச்சர், அமைச்சர்களை பற்றிய புகார் அளித்தார். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
விளக்கமளிக்கவில்லை
இதனையடுத்து தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயல்பட்ட தனவேலுவை எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் (பதவி பறிப்பு) செய்ய வேண்டும் என்று அரசு கொறடா அனந்தராமன் கடந்த 14.1.2020 அன்று என்னிடம் மனு அளித்தார். மேலும் தனவேலு கடந்த 29.1.2020 அன்று பத்திரிகையாளர்களிடமும் ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை கூறினார். இதுதொடர்பாகவும் அனந்தராமன் கடந்த 30.1.2020 அன்று மீண்டும் ஒரு மனு அளித்து தனவேலு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது அளித்த மனுவின்போது தனவேலு பேசியதை பதிவு செய்த குறந்தகடையும் (சி.டி.) இணைத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தனவேலுவிடம் கடந்த 6.2.2020-ல் அனந்தராமன் மனுவிற்கு விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் அவரிடம் 17.2.2020, 3.3.2020, 10.3.2020, 17.3.2020 மற்றும் இறுதியாக 28.5.2020 அன்றும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. எனது அனைத்து நோட்டீஸ்களுக்கும் நேரில் வந்தோ அல்லது வரமுடியாத காரணங்கள் இருப்பின் அதனை கடிதத்திலோ தெரிவித்த தனவேலு தான் பேசியதை அல்லது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை பொதுவில் மறுத்தாலும், எந்த ஒரு ஆதாரத்துடனும் நேற்று வரை விளக்கமளிக்கவில்லை. தொடர்ந்து போதிய வாய்ப்புகள் அளித்தும் தனவேலு விளக்கமளிக்க தவறிவிட்டார்.
கட்சிக்கு விரோதம்
கட்சித்தாவல் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு 10-வது இணைப்பு பட்டியல் பத்தி 2 (1) (ஏ) ஒரு உறுப்பினர் தாமாக முன்வந்து பதவியை துறத்தல் என்ற அடிப்படையில் பதவி இழப்பு செய்யப்படலாம் என்று கூறுகிறது. இந்த விசாரணையில், உரிமை வழக்கு விசாரணை முறைச்சட்டம், குற்றவியல் விசாரணை முறை தொகுப்பு சட்டம் ஆகியவற்றை நான் கை கொள்ளவில்லை.
இயற்கை நீதி (அறம்) என்பதன் அடிப்படையில் அமைந்தது இந்த விசாரணை. தன்னை தேர்ந்தெடுத்து சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்த கட்சிக்கு விரோதமாக நடப்பது தாமே தன் சட்டசபை உறுப்பினர் பதவியை துறத்தலுக்கு சமமாகும்.
நான் மேற்கொண்ட நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் 10-வது இணைப்புப் பட்டியல் 1963-ம் ஆண்டு ஒன்றிணைத்து ஆட்சிப்பரப்பு சட்டம் மற்றும் 1986-ம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் (கட்சித்தாவல் அடிப்படையில் பதவி இழப்பு செய்தல்) விதிகள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளதன் வகைமுறைகளுக்கு உட்பட்டதாகும். பாகூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story