சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து ஏட்டுக்கு தொற்று: வடசேரி போலீஸ் நிலையத்தை ஆட்டி படைக்கும் கொரோனா 2-வது தடவையாக மூடப்பட்டது


சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து ஏட்டுக்கு தொற்று: வடசேரி போலீஸ் நிலையத்தை ஆட்டி படைக்கும் கொரோனா 2-வது தடவையாக மூடப்பட்டது
x
தினத்தந்தி 12 July 2020 4:00 AM IST (Updated: 12 July 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

வடசேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

வடசேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 2-வது முறையாக வடசேரி போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

ஏட்டுக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அவ்வப்போது தாக்கி அச்சுறுத்தி வருகிறது. நாகர்கோவில் வடசேரி சந்தையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் உடன் பணியாற்றும் சக போலீசார் அச்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து வடசேரி போலீஸ் நிலையம் மூடப்பட்டது. பின்னர் மீண்டும் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் வடசேரி போலீஸ் நிலைய தலைமை ஏட்டு ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் குளச்சல் பகுதியை சேர்ந்தவர். இதனையடுத்து அவருக்கு நடந்த பரிசோதனையில் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது.

போலீஸ் நிலையம் மூடப்பட்டது

பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 2-வது தடவையாக வடசேரி போலீஸ் நிலையம் மீண்டும் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு பணிபுரிந்த போலீசாரை மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கொரோனா பாதித்த ஏட்டுவுடன் தொடர்பில் இருந்த போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதேபோல நாகர்கோவில் பட்டாலியன் பிரிவில் பணியாற்றும் 32 வயது பெண் போலீசுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story