மும்பையில் கொரோனாவுக்கு மாநகராட்சி துணை கமிஷனர் பலி


மும்பையில் கொரோனாவுக்கு மாநகராட்சி துணை கமிஷனர் பலி
x
தினத்தந்தி 12 July 2020 4:00 AM IST (Updated: 12 July 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொரோனாவுக்கு மாநகராட்சி துணை கமிஷனர் பலியானார்.

மும்பை, 

மும்பையில் கொரோனாவுக்கு மாநகராட்சி துணை கமிஷனர் பலியானார்.

மாநகராட்சி அதிகாரி பலி

மும்பை மாநகராட்சி எச்-கிழக்கு வார்டில் துணை கமிஷனராக இருந்தவர் அசோக் கைர்னர்(வயது57). இவர் கொரோனா நோய் பரவலை தடுக்க தீவிரமாக பணியாற்றி வந்தவர் ஆவார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் போர்டிஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

3-வது அதிகாரி

மும்பையில் கொரோனாவுக்கு உயிரிழக்கும் 3-வது மாநகராட்சி அதிகாரி அசோக் கைர்னர் ஆவார். இதேபோல இதுவரை 103 மாநகராட்சி ஊழியர்கள் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கொரோனாவுக்கு உயிரிழக்கும் மாநகராட்சி ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என கமிஷனர் இக்பால் சகால் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story