காய்கறி, பழம், பூக்கடைகளை தவிர வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மற்ற கடைகள் நாளை முதல் திறக்க அனுமதி கலெக்டர் தகவல்


காய்கறி, பழம், பூக்கடைகளை தவிர வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மற்ற கடைகள் நாளை முதல் திறக்க அனுமதி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 July 2020 5:30 AM IST (Updated: 12 July 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூக்கடைகளை தவிர மற்ற கடைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

வேலூர், 

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூக்கடைகளை தவிர மற்ற கடைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

கடைகள் மூடல்

வேலூர் மாநகரின் முக்கிய வியாபார மையமான நேதாஜி மார்க்கெட், மண்டித்தெருவில் அமைந்துள்ள அனைத்து கடைகளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டன.

இந்த நிலையில வணிகர் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம், 3 மாதத்துக்கும் மேலாக கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று நேதாஜி மார்க்கெட்டில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் குறித்து வணிகர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கு கடைகள் திறப்பது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வணிகர்சங்கத்தினர் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கலெக்டர், கொரோனா தொற்று காரணமாக கஸ்பா அரசுப்பள்ளியில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் சளிமாதிரி சேகரிப்பை ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

3,348 படுக்கைகள்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சி மற்றும் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் தொற்று அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டம் முழுவதும் 3,348 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆயுர்வேத மருந்துகள் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளன. தொற்று பாதித்த பகுதிகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. கொரோனா இறப்பு மாவட்டத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு சளிமாதிரி பரிசோதிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகள் திறக்க அனுமதி

நேதாஜி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள காய்கறி, பூ, பழக்கடைகள் திறக்க அனுமதி கிடையாது. மளிகை, பாத்திரம், ஜவுளி, மண்பாண்ட கடைகள் உள்ளிட்ட 240 கடைகள் மட்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் மண்டித்தெருவில் ஒரு நாளைக்கு ஒரு பகுதி, மறுநாளுக்கு எதிர்பகுதி என சுழற்சி முறையில் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்காலிக காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story