வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி மாற்று சேலை அணிந்து தப்பியோட்டம்
பெண் விசாரணை கைதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மாற்று சேலை அணிந்து தப்பியோடினார்.
அடுக்கம்பாறை,
ஆரணியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் விசாரணை கைதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மாற்று சேலை அணிந்து தப்பியோடினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட மேஸ்திரி கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை கமண்டல நாகநதி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணிக்கும் (33) இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. சரவணன் திருமணம் செய்து கொள்வதாக கூறி கிருஷ்ணவேணியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணவேணிக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் சரவணனுடன் செல்போனில் பேசுதையும், நேரில் சந்திப்பதையும் கிருஷ்ணவேணி தவிர்த்துள்ளார். ஆனால் சரவணன் நேரில் சந்திக்க வரும்படி வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சுரேசிடம் இதுகுறித்து கிருஷ்ணவேணி கூறினார்.
சரவணனை ஒழித்து கட்டினால் தான் இருவரும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சுரேசும், கிருஷ்ணவேணியும் எண்ணினர். அதனால் இருவரும் சேர்ந்து சரவணனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். கிருஷ்ணவேணி கடந்த ஜனவரி 17-ந் தேதி காலை ஆரணி முள்ளிப்பட்டு ஆற்றங்கரைக்கு வரும்படி சரவணனை செல்போனில் அழைத்துள்ளார். அதன்படி அவர் அங்கு வந்தார். அப்போது கிருஷ்ணவேணியும், சுரேசும் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி ஆற்றங்கரை கால்வாயில் சரவணனை தள்ளிவிட்டு கடப்பாரையால் குத்தி கொலை செய்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
வேலூர் ஜெயிலில் அடைப்பு
இதுதொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணவேணியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சுமார் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர்.
நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணவேணியை போலீசார் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். அதை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான கிருஷ்ணவேணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அவர் 7-ந் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருக்கு குறைமாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண் ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் கிருஷ்ணவேணி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மாற்று சேலை அணிந்து தப்பியோட்டம்
நேற்று காலை 11 மணியளவில் கிருஷ்ணவேணி குளியலறைக்கு செல்வதாக ஜெயில் காவலர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் பெண் காவலர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு கிருஷ்ணவேணி அணிந்திருந்த நீலநிற சேலை மட்டும் அறையின் ஓரத்தில் கிடந்துள்ளது. அவர் மாற்று சேலை அணிந்து அங்கிருந்து தப்பிசென்றது அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வந்தது.
அதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜெயில் காவலர்கள் உடனடியாக அந்த கட்டிடம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயில் காவலர்கள் இணைந்து மருத்துவமனை வளாகம், அப்பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடியும் கிருஷ்ணவேணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜெயில் காவலர்கள் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து மருத்துவமனை வளாகம் மற்றும் பஸ்நிறுத்தம் அருகேயுள்ள உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளில் கிருஷ்ணவேணி தப்பிசென்றது மற்றும் அவருக்கு உதவிய நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் விசாரணை கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் வேலூர் ஜெயில், போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story