விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 44 பேருக்கு கொரோனா திண்டிவனம் கிளை சிறையில் கைதிக்கும் தொற்று உறுதியானது
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை, திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதி உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை, திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதி உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
44 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 883 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 509 பேர், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 150-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 31 ஆண்கள், 13 பெண்கள் என மேலும் 44 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், கொங்கரப்பட்டு, ஒலக்கூர், மேல்பேட்டை, திண்டிவனம், ரோஷணை, செஞ்சி, நெகனூர், ஒட்டம்பட்டு, சித்தானங்கூர், மேல்மலையனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் திண்டிவனம் கீழ்பசாரை சேர்ந்த 45 வயதுடைய கிராம உதவியாளர், கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 54 வயதுடைய அரசு பஸ் கண்டக்டர், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பெண் ஊழியராக பணியாற்றி வரும் 30 வயதுடையவர், விழுப்புரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியையும் ஆவார்கள்.
மணல் கடத்தலில் கைதானவர்
மேலும் திண்டிவனம் கிளை சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் 48 வயதுடைய நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
செஞ்சியில் மணல் கடத்தியதாக 48 வயதுடையவர் கைது செய்யப்பட்டு திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான முடிவு நேற்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே திண்டிவனம் சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 18 விசாரணை கைதிகள் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
1,455 ஆக உயர்வு
நேற்று பாதிக்கப்பட்ட 44 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,455 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 38 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 551 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story