திருச்சி கே.கே.நகரில் வீட்டில் பதுக்கிய 90 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது


திருச்சி கே.கே.நகரில் வீட்டில் பதுக்கிய 90 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 July 2020 8:33 AM IST (Updated: 12 July 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் சாஸ்தாதெருவில் ஒரு வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து இருப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கே.கே.நகர்,

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். போலீசாரை கண்டதும், அங்கிருந்த 2 பேரில் ஒருவர் ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் காரைக்குடியை சேர்ந்த சத்தியசீலன்(வயது 31) என்பது தெரியவந்தது.

மேலும், இவர் அரசு மதுபானங்களை சிறுக, சிறுக வாங்கி மதுக்கடை திறப்பதற்கு முன்பும், கடையை பூட்டிய பின்பும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், பதுக்கிய மதுபாட்டில்களில் பாதி அளவு மதுவை எடுத்து வேறு பாட்டிலில் ஊற்றிவிட்டு, போதையை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாத்திரையை தண்ணீரில் கலந்து அதை பாதி மதுபாட்டிலில் ஊற்றி முழு பாட்டிலாக விற்பதற்கும் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்தியசீலனை கைது செய்தனர். அவரிடமிருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story