கோவை வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நிறுத்தம்


கோவை வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 July 2020 3:29 AM GMT (Updated: 12 July 2020 3:29 AM GMT)

கோவை வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை வந்த 20 ஆயிரம் பேரில் 126 பேருக்குத் தான் தொற்று உறுதியாகி இருக்கிறது.

கோவை,

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து விமான பயணிகள் மூலம் தான் வெளிநாடுகளுக்கு தொற்று பரவியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் விமான பயணத்தை தவிர்த்தனர். இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோவை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்படி கோவைக்கு கடந்த 9-ந் தேதி வரை 221 விமானங்கள் வந்துள்ளன.

சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட இந்த விமானங்கள் மூலம் 20 ஆயிரத்து 442 பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 126 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஒரு சதவீதத்துக்கும் குறைவு ஆகும்.

இதனால் உள்நாட்டு விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லாததால் கடந்த சில நாட்களாக கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவது நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இதே போல வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாவதும் குறைந்து உள்ளது. கோவைக்கு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. துபாய், சிங்கப்பூர், கொழும்பு, கென்யா, புருனே, சார்ஜா ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 14 விமானங்கள் கோவைக்கு வந்துள்ளன.

இவற்றின் மூலம் 2 ஆயிரத்து 394 பயணிகள் வந்து உள்ளனர். அவர்களில் 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. மற்றவர்களுக்கு உறுதியாகவில்லை. இருந்தபோதிலும் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் உறுதியானால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொற்று உறுதியாகாதவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு விமானங்கள் மூலம் கோவைக்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதை தவிர்த்து விமானங்கள் மூலம் கோவை வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Next Story