கொரோனா பரவும் அபாயம்: டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம மக்கள் மனு


கொரோனா பரவும் அபாயம்:  டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 12 July 2020 11:07 AM IST (Updated: 12 July 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூரில் ஊரடங்கு நேரத்தில் செயல்படும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அலங்காநல்லூர்,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மதுரையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சி, கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி மதுப்பிரியர்கள் மதுவாங்கி அருந்த முடியாமல் தவித்தனர். அதேநேரத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதியான அலங்காநல்லூரில் டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தன. இதனால் அவர்கள் அலங்காநல்லூருக்கு சென்று மதுவாங்கி வருகின்றனர்.

அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளிலும் ஏராளமானோர் வந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் கிராம மக்கள் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் அலங்காநல்லூர் பகுதிக்கு அதிக அளவில் மதுபாட்டில் வாங்க மதுப்பிரியர்கள் வந்து செல்கின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், அவர்கள் வந்து செல்வதால் நோய் பரவல் அதிகமாக ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தில் இருக்கிறோம். மேலும் எங்கள் ஊர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், ஆற்றங்கரை, மந்தைப்பகுதி உள்ளிட்ட பொதுவான இடங்களில் மதுவை அருந்திவிட்டு செல்கின்றனர். எங்கள் ஊருக்கு ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் கடைகள் தேவையற்றது. இந்த கடைகள் முன்பு மதுவாங்க வருவர்கள் அதிக அளவில் நிற்பதால் அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே கிராமமக்கள் நலன் கருதி இந்த 3 டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காவல் துறை, வருவாய்துறை, தமிழ்நாடு வாணிப கழகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் மனு அனுப்பி உள்ளனர்.

Next Story