தொற்று அதிகமானதால் 6 பாதைகள் ‘சீல்’ வைப்பு: நாகர்கோவிலில் இதுவரை 203 பேர் கொரோனாவால் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
நாகர்கோவிலில் இதுவரை 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அதிகமானதால் வடசேரி பகுதியில் 6 பாதைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் இதுவரை 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அதிகமானதால் வடசேரி பகுதியில் 6 பாதைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதே சமயத்தில், நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் தொற்று பாதிப்பு, மற்ற இடங்களை விட குறைவாக இருந்தது.
கொரோனா ஊரடங்கு தொடங்கிய போது, கூட்ட நெரிசல் இன்றி பொருட்கள் வாங்குவதற்காக வடசேரி கனகமூலம் சந்தை, வடசேரி பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கி சென்றனர். வியாபாரிகளும் கொரோனா விதியை கடைபிடித்தனர். இதனால் கொரோனா அவர்களை நெருங்க முடியவில்லை.
வடசேரி சந்தையை புரட்டி போட்டது
சில மாதங்கள் கழித்த பிறகு அலட்சியம் மக்களிடையேயும், வியாபாரிகளிடையேயும் உருவானது. இந்த அலட்சியத்தால் முதன் முதலாக ஒரு வியாபாரிக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் வடசேரி சந்தையை கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. வியாபாரிகள், அவர்களின் குடும்பத்தினர், காய்கறி வாங்க வந்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் கொத்து, கொத்தாக தொற்று ஏற்பட்டது. இதனால் வடசேரி தற்காலிக சந்தையான பஸ்நிலையமும் மூடப்பட்டது.
சென்னை கோயம்பேடு போன்று நாகர்கோவிலிலும் வடசேரி சந்தை கொரோனா தொற்றுக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதற்கிடையே, அடுத்த பாதிப்பு கோட்டார் மார்க்கெட்டை மையமாக வைத்து பரவ தொடங்கியது. தொடர்ந்து பரவிக் கொண்டேயும் இருக்கிறது.
வீடு, வீடாக சென்றுபரிசோதனை
இதேபோல் மார்த்தாண்டம், களியக்காவிளை, குழித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த சந்தைகள் நோய் தொற்றுக்கு காரணமாக உள்ளது. நாகர்கோவிலில் வடசேரி பகுதியில் தொற்று அதிகமாக உள்ளது. இதனால் அங்கு 6 பாதைகள் ஒரே நேரத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் கொரோனா பாதிப்பு குறித்து மாநகர் நல அதிகாரி கிங்சால் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளச்சிங் பவுடர் போடப்பட்டு வருகிறது. மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, சளி பாதிப்பு இருக்கிறதா? என விவரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் 203 பேருக்கு..
தற்போது வரை நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 203 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நோய் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருந்ததியர் தெருவில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அப்பகுதி முழுவதும் “சீல்“ வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கிங்சால் கூறினார்.
Related Tags :
Next Story