ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு பிரியாணி தளவாய்சுந்தரம் வழங்கினார்


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு பிரியாணி தளவாய்சுந்தரம் வழங்கினார்
x
தினத்தந்தி 13 July 2020 4:15 AM IST (Updated: 12 July 2020 11:27 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு பிரியாணியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி,

முழு ஊரடங்கையொட்டி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு பிரியாணியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார்.

பிரியாணி

குமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய புரோட்டின் சத்துள்ள உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 550 பேருக்கு மூலிகை கலந்த முட்டையுடன் கூடிய கோழிபிரியாணி வழங்கப்பட்டது. இந்த கோழி பிரியாணி தயாரிக்கும் பணிகள் சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் நடந்தது. அங்குள்ள சமையல் கூடத்திற்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சென்று மூலிகை கலந்த பிரியாணி தயாரிக்கும் முறையை பார்த்ததுடன், அதனை சாப்பிட்டு ருசி பார்த்தார்.

அதன்பிறகு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி 550 பார்சலை தளவாய்சுந்தரம், ஆஸ்பத்திரி சமையல் வல்லுனர்கள் ராஜேஷ், அரிபிரசன்னா ஆகியோரிடம் வழங்கினார்.

பேட்டி

இதுகுறித்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனைப்படி, குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலாளரும், ஆவின் தலைவருமான எஸ்.ஏ.அசோகன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சத்தான உணவு வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இன்று (அதாவது நேற்று) 550 பேருக்கு மூலிகை மருந்து கலந்த முட்டையுடன் கூடிய கோழிபிரியாணியை வழங்கி உள்ளார்.

இது புரோட்டின் சத்துகுறைவான நோயாளிகளுக்கு புரோட்டின் சத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீரானமுறையில் இதற்கென்று தனிதிறமைபெற்ற மூலிகைசமையல் கலைஞர்கள் 3 பேர் மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகள் கூடிய விரைவில் குணமடைந்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குமரிமாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாக ஏற்படுவதாக தகவல் வந்திருந்தாலும் அதை தடுக்கும் விதமாக மாவட்டநிர்வாகமும் போலீஸ் துறை, தீயணைப்பு துறை மற்றும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆகியோர் சீரிய முறையில் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். இதில் குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், அறங்காவலர் குழுஉறுப்பினர் சதாசிவம் மற்றும் எஸ்.ஏ. விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story