சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: நெல்லையில் சி.பி.ஐ. அலுவலகம் அமைப்பு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, நெல்லையில் சி.பி.ஐ. அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, நெல்லையில் சி.பி.ஐ. அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் நேற்று ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
சி.பி.ஐ. விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்துச்சென்று தாக்கினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுஷல் குமார் வர்மா, சச்சின், போலீஸ்காரர்கள் அஜய்குமார், சைலேந்திரகுமார், பவன்குமார் திவேதி ஆகிய 8 பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ள ஆவணங்களை பெற்றுக்கொண்டு தீவிர விசாரணையில் இறங்கினர்.
அலுவலகம் அமைப்பு
முதல் நாள் இரவில் விசாரணையை முடித்துக்கொண்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்கினார்கள். 2-வது நாளான நேற்று முன்தினம் 2 குழுவினர் சாத்தான்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஒரு குழுவினர் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்து சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு அனில்குமார் உடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று சுற்றுலா மாளிகையில் 5-வது எண் அறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அலுவலகத்தை அமைத்தனர். அங்கு தங்களுக்கு தேவையான கணினி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்தனர். பின்னர் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். காலையில் இருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த பணி மும்முரமாக நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் மாலை 4 மணி வரை தொடர்ந்து பணி நடந்தது.
Related Tags :
Next Story