கொரோனா தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கால் நெல்லை-தூத்துக்குடி முடங்கியது தென்காசியில் கடைகள் அடைப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கால் நெல்லை-தூத்துக்குடி முடங்கியது தென்காசியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 13 July 2020 5:00 AM IST (Updated: 13 July 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் நெல்லை, தூத்துக்குடி முடங்கியது.

நெல்லை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் நெல்லை, தூத்துக்குடி முடங்கியது. தென்காசியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதே மீண்டும் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் ஜூலை மாதத்தில் உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

கடைகள் அடைப்பு

அதன்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நெல்லையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு திடலில் உள்ள தற்காலிக மார்க்கெட், மகாராஜ நகர் பகுதி 3 பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள், டவுன் பள்ளிக்கூட வளாகம், பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டன. டவுன், பேட்டை, பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் நேற்று அங்கு யாரும் இல்லாமல் கூடாரங்கள் காலியாக கிடந்தன.

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இயங்கிய காய்கறி மொத்த மார்க்கெட்டும் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் மற்றும் மாநகராட்சி காவலாளிகள் தவிர வேறு யாரும் இல்லை. மாநகரில் ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

சாலைகள் வெறிச்சோடின

மேலும் பொதுமக்களும் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள். இதனால் நெல்லையில் சாலைகளில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, புறவழிச்சாலை, திருவனந்தபுரம் ரோடு என எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் ரோடுகளில் நேற்று வாகனங்கள் எதுவும் செல்லாமல் வெறிச்சோடியது.

நெல்லையில் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆங்காங்கே வந்த ஒரு சில வாகனங்களை நிறுத்தி விளக்கம் கேட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தோரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையொட்டி நேற்று தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்வோர் எண்ணிக்கையும் குறைந்தது. இதே போல் மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், திசையன்விளை, சேரன்மாதேவி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. கார், வேன், ஆட்டோக்கள் முழுமையாக இயங்கவில்லை. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

மேலும் ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உரிய அறிவுரைகள் வழங்கி திருப்பி அனுப்பினர். தொடர்ந்து வெளியில் சுற்றி வந்த சிலருக்கு அபராதம் விதித்தனர்.

தென்காசி

தென்காசியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

Next Story