கர்நாடகத்தில் ஞாயிறு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவு பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
கர்நாடகத்தில் ஞாயிறு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவு வழங்கினர். பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஞாயிறு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவு வழங்கினர். பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
2-வது ஞாயிற்றுக்கிழமை
கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க கடந்த 5-ந் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு பின்பற்றப்படும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமை அதாவது கடந்த 5-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் பொதுமக்கள், ஊரடங்கிற்கு ஆதரவு வழங்கினர். மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இந்த நிலையில் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 33 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருந்தது.
கடைகள் மூடப்பட்டிருந்தன
இந்த ஊரடங்கையொட்டி பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய கடைகள், காய்கறி, இறைச்சி, பழக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றதை காண முடிந்தது. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பால் விற்பனை கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் உணவு கிடைக்காமல் பலரும் திண்டாடினர்.
பஸ்கள் உள்பட வாகனங்கள் ஓடாததால், பெங்களூருவில் எம்.ஜி.ரோடு, ஜே.சி.ரோடு, லால்பாக் ரோடு, ஓசூர் ரோடு, ரெசிடென்சி ரோடு, ரிச்மண்டு சர்க்கிள், கார்ப்பரேஷன் சர்க்கிள் உள்ளிட்ட ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மெஜஸ்டிக் கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் பி.எம்.டி.சி. பஸ் நிலையங்கள் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மக்கள் முழு ஆதரவு
மெஜஸ்டிக் பகுதிகளில் வாகன சத்தமின்றி மவுனம் குடிகொண்டிருந்ததை காண முடிந்தது. அதே போல் மைசூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி, பல்லாரி, தாவணகெரே, துமகூரு, சித்ரதுர்கா, கலபுரகி, ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, பாகல்கோட்டை, தட்சிணகன்னடா, உடுப்பி, சிவமொக்கா, குடகு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கிற்கு மக்கள் ஆதரவு வழங்கினர். அங்கும் பஸ் உள்பட எந்த வாகனமும் இயங்கவில்லை.
மொத்தத்தில் கர்நாடகத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவு வழங்கினர்.
போலீஸ் எச்சரிக்கை
ஊரடங்கை மீறி பெங்களூரு, மைசூரு, ராய்ச்சூர், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் தடியால் விரட்டியடித்தனர். மேலும் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய காட்சிகளையும் காண முடிந்தது. இந்த ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story