பாகிஸ்தானை விட சீனா தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் சரத்பவார் கருத்து


பாகிஸ்தானை விட சீனா தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் சரத்பவார் கருத்து
x
தினத்தந்தி 13 July 2020 4:15 AM IST (Updated: 13 July 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானைவிட சீனா தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மும்பை, 

பாகிஸ்தானைவிட சீனா தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நமது எதிரி யார் என யோசித்தால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாகிஸ்தான் தான். ஆனால் நாம் பாகிஸ்தானை பற்றி கவலைப்பட தேவையில்லை.

சீனா நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. இந்திய ராணுவத்தைவிட சீன ராணுவம் 10 மடங்கு வலிமை மிக்கது. இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உள்ளது.

ராஜதந்திர நடவடிக்கை

சீன விவகாரத்தில் எந்த அரசியலும் இருக்க கூடாது என நினைக்கிறேன். நம்மால் சீனாவை எதிர்க்க முடியும். ஆனால் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போது ஒட்டுமொத்த தேசமும் அதற்கு விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ராஜதந்திர நடவடிக்கை, பேச்சு வார்த்தை மூலம் சீனாவுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தானை மட்டுமல்ல வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக சீனா மாற்றி உள்ளது. சீனா, பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்திரா காந்தியையும், நேருவையும் குற்றம்சாட்டுகிறார். ஆனால் நேரு காலத்தில் இந்தியா- சீனா இடையே நல்லுறவு இருந்தது. சீனா வல்லரசாகும் என மோடி கணித்தார். எனவே அவர் சீனா உறவை வளர்க்க வேண்டும் என விரும்பினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தவே நேரு பஞ்சசீலக்கொள்ைகயை அறிமுகப்படுத்தினார். ஆனால் தற்போது சீன தலைமை அதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து இருப்பது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருளாதார பிரச்சினை

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சரத்பவார் கூறுகையில், ‘‘மன்மோகன் சிங் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது அவர் இந்திய பொருளாதாரத்தில் புதிய பாதையை உருவாக்கினார். அப்போது நான் மந்திரி சபையில் இடம்பெற்று இருந்தேன். மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆகியோர் பொருளாதார நெருக்கடியில் புதிய மாற்றத்தை உருவாக்கியவர்கள். மோடியும் பொருளாதாரத்தை மேம்படுத்த வல்லுனர்களின் உதவியை நாடவேண்டும். அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாடு அவருக்கு ஆதரவாக இருக்கும். நாட்டுக்கு மற்றொரு மன்மோகன் சிங் தேவைப்படுகிறார்’’ என்றார்.

மராட்டியத்தில் தனது கட்சி உள்ளிட்ட 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி பற்றி சரத்பவார் கூறும்போது, 6 மாதங்களில் ஒரு ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பிடமுடியாது, என்றார்.

Next Story