அனைத்து கடைகளும் மூடல்: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய வேலூர் மாநகரம் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள் மீது வழக்கு


அனைத்து கடைகளும் மூடல்: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய வேலூர் மாநகரம் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 July 2020 4:26 AM IST (Updated: 13 July 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக வேலூர் மாநகராட்சியில் மருத்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

வேலூர், 

முழு ஊரடங்கு காரணமாக வேலூர் மாநகராட்சியில் மருத்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் இந்த மாத (ஜூலை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி ஜூலை மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. மளிகை, காய்கறி, மளிகை, மீன், இறைச்சி உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

சாலைகள் வெறிச்சோடின

பெட்ரோல் பங்குகளில் ஆம்புலன்ஸ் மற்றும் அரசுப்பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பெட்ரோல் பங்குகளில் அனைத்து மோட்டார் சைக்கிள்களுக்கும் பெட்ரோல் நிரப்பியதை காண முடிந்தது. ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை.

ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளும் வெறிச்சோடின. அதேபோன்று மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஆரணிசாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, கிரீன்சர்க்கிள், கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதி, மக்கான் சந்திப்பு, நேஷனல் சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வழக்குப்பதிவு

ஓட்டல் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும் காலை வேளையில் சத்துவாச்சாரி பகுதியில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் ஏராளமானவை சாலைகளில் சென்றன. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவர்களை அந்த பகுதி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

முழுஊரடங்கை அமல்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தானம், தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை உள்பட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கை மீறி இயங்கிய ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story