திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி


திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி
x
தினத்தந்தி 13 July 2020 4:34 AM IST (Updated: 13 July 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 ஆயிரம் பேர் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் மேலும் பெண் உள்பட 5 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு::-

முதியவர்கள் பலி

தண்டராம்பட்டு தாலுகாவை சேர்ந்த 78 வயது முதியவர் கொரோனா அறிகுறி காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 9-ந் தேதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல கலசபாக்கம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 67 வயதுடைய நபரும் கொரோனா அறிகுறி காரணமாக பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவை சேர்ந்த 64 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் திருவண்ணாமலை அருகே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

தையல் தொழிலாளி

ஆரணி புதுக்காமூர் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியான முதியவருக்கு 8-ந்தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர், ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கு, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. மூச்சுவிட முடியாமல் திணறிய அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவரின் பிணத்தை நேற்று இரவே கொண்டு வந்து ஆரணியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கொரோனாவுக்கு பெண் பலி

திருவண்ணாமலை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (61). இவர் திருவண்ணாமலை சன்னதி தெருவில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரகதாம்பாள் (54). இவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அவர் தண்டராம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அவர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தண்டராம்பட்டில் அவர் மேற்கொண்டிருந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவரை உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதிர்ச்சியில் கணவர் சாவு

அங்கு தமிழக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அவரின் உடல் பாதுகாக்கப்பட்டது. பின்னர் நகராட்சி எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்பட்டது. மனைவி இறந்த செய்தி கேட்ட பாலசுப்பிரமணியன் சோகத்தில் ஆழ்ந்தார். மாலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் 5.30 மணி அளவில் திடீரென உயிரிழந்தார்.

25 ஆக உயர்வு

இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியான சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்

வேலூர் தொரப்பாடி வேளார் பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் (வயது 70) என்பவர் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவனையில் சேர்ந்தார். அவரை கொரோனா தனி வார்டில் டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடியாத்தம்

குடியாத்தம் தாலுகாவில் கொரோனா தொற்றால் ஏற்கனவே குடியாத்தத்தை அடுத்த சின்னாலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர், தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர், நெல்லூர்பேட்டை கணபதி நகரைச் சேர்ந்த 51 வயது ஆண், நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த 82 வயது முதியவர், கூடநகரம் ரோடு நிஜாமுதீன் தெருவைச் சேர்ந்த 64 வயது முதியவர் என மொத்தம் 7 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று உயிரிழந்தனர்.

இந்தநிலையில் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி அன்பு தெருவைச் சேர்ந்த பாபு (வயது 53) என்பவர் கடந்தசில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பாபு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார். அவர், ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சி சாலைநகர் பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபார அலுவலகம் வைத்துள்ளார். அந்த அலுவலகத்துக்கு அவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 9-ந்தேதி சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 10-ந்தேதி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு செய்யப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை முடிவின் விவரம் நேற்று தெரிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறையினர் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்திருந்த சாலை நகர் பகுதிக்குச் சென்று, அந்த அலுவலகம் இருக்கும் இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, பேனர் வைத்தனர்.

Next Story