அரக்கோணம் தொகுதியில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதி உதவி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி இரவு 128 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட மோசூர், கீழாண்டை தெருவில் வசிக்கும் காந்தம்மாள் என்பவரின் வீடு, தக்கோலம் காந்தி நகரை சேர்ந்த ரவி என்பவரின் வீடு இடிந்து சேதமடைந்தது. ரவி வீட்டில் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தது. அரக்கோணம் நகரம், கிருபில்ஸ்பேட்டை, செய்யூர்பாட்டை தெருவில் வசிக்கும் கங்காதரன் என்பவரின் குடிசை வீடு மின் கசிவினால் தீயில் எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சு.ரவி மழையால் வீடுகளை இழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு போன் மூலமாக ஆறுதல் கூறி, அரசு நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து வீடுகளை இழந்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் எம்.எல்.ஏ. சு.ரவி தனது சொந்த பணத்தை வழங்கினார். பணத்தை வங்கி கணக்கு மூலமாக பெற்றுக் கொண்டவர்கள் எம்.எல்.ஏ. சு.ரவிக்கு நன்றி தெரிவித்தனர்.
நிதி உதவி பெற்றுத் தர உதவிய அரக்கோணம் நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர் இ.பிரகாஷ், தக்கோலம் பேரூராட்சி செயலாளர் ஜெ.பச்சையப்பன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story