முழு ஊரடங்கு எதிரொலி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை
முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
கடலூர்,
முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஸ், ரெயில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
சாலைகள் வெறிச்சோடின
அதன்படி இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடலூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் லாரன்ஸ் சாலையில் கடைகள் பூட்டி இருந்ததால் அங்கு ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர். மேலும் வாகனங்கள் மூலம் சாலைகள் மற்றும் தெருக்களில் கிருமிநாசினி தெளித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தினர்.
அதேபோல் கடலூர்-சிதம்பரம் சாலை, மஞ்சக்குப்பம் மைதானம், கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மற்றும் பழக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் மருந்துகடைகள், பால் கடைகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்ததால் நகரின் பிரதான சாலைகளில் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. விரல்விட்டு எண்ணும் வகையில் ஒரு சில வாகனங்கள் சென்று வந்ததை பார்க்க முடிந்தது.
தடுப்புகள் அமைத்து...
முழு ஊரடங்கையொட்டி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.
கடலூரில் மஞ்சக்குப்பம் ரவுண்டானா, திருப்பாதிரிபுலியூர், நான்கு முனை சந்திப்பு, கம்மியம்பேட்டை, ஆல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்தனர். சில பிரதானசாலைகளின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதையை போலீசார் அடைத்து இருந்தனர்.
எச்சரிக்கை
அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், தொழுதூர், ராமநத்தம், வேப்பூர், புதுப்பேட்டை என மாவட்டம் முழுவதிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீசார் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வாகனங்களில் சுற்றி வந்தவர்களை எச்சரித்தும், சிலரது மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story