முழு ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 13 July 2020 6:57 AM IST (Updated: 13 July 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின.

திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மேலும் ரெயில், பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கொரோனா வைரசும் வேகமாக பரவ தொடங்கியது. மாநிலம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் ஒருசில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும், இந்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி திண்டுக்கல்லில் நேற்று முன்தினமே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

இதில் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரவு 8 மணி வரை அனைத்து கடைகளிலும் விற்பனை களைகட்டியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் கடைவீதி, மார்க்கெட் பகுதி உள்பட முக்கிய இடங்களில் போலீசார் குவிக் கப்பட்டனர். மேலும் காலை 6 மணி முதல் போலீசார் ரோந்து சென்றபடி இருந்தனர்.

இதற்கிடையே ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிவோரை பிடித்து வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரிவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒருசில பகுதியில் குறுக்குத்தெரு வழியாக வாகனங்களில் வந்த பெண்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும் சில குடியிருப்பு பகுதிகளில் சிறிய அளவிலான பெட்டிக்கடைகள் காலையில் திறந்து இருந்தன.

போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. ஒருசிலரை தவிர பெரும்பாலான மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனால் நகர் முழுவதும் மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் போனது. பொதுவாக வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் திண்டுக்கல், கொடைக்கானல், பழனி, வத்தலக்குண்டு உள்பட முக்கிய நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story