ஈரோட்டில் முழு ஊரடங்கு: அனைத்து கடைகள் அடைப்பு; ரோடுகள் வெறிச்சோடின


ஈரோட்டில் முழு ஊரடங்கு: அனைத்து கடைகள் அடைப்பு; ரோடுகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 13 July 2020 8:03 AM IST (Updated: 13 July 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ரோடுகள் வெறிச்சோடின.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஊரடங்கு நடைமுறைகள் அமலுக்கு வந்தன. நள்ளிரவில் இருந்தே போலீசார் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலையில் இருந்து ரோடுகளில் செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா, சுவஸ்திக் கார்னர், காளைமாடு சிலை, கொல்லம்பாளையம், திண்டல், கருங்கல்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி சந்தை விடுமுறை காரணமாக வ.உ.சி. பூங்கா மைதானம் தற்காலிக சந்தை இயங்கவில்லை. மணிக்கூண்டு, கடைவீதி, பன்னீர்செல்வம் பூங்கா, காந்திஜிரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, வெங்கடாசலம் வீதி, பொன்வீதி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள், வீதிகள் வெறிச்சோடி கிடந்தன.

அவ்வப்போது ஓரிரு வாகனங்கள் மட்டுமே சென்றன. அந்த வாகனங்களையும் போலீசார் தடுத்து, அத்தியாவசிய தேவை இல்லாமல் சென்றவர்களை திருப்பி அனுப்பினார்கள். மேம்பாலம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, கருங்கல்பாளையம் காவிரி பாலம் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி இருந்தன. கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வாகனங்கள் ஏதும் இன்றி சற்று ஓய்வாக இருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணிவரை இந்த நிலை நீடித்தது.

Next Story