முழு ஊரடங்கு அமல்: நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


முழு ஊரடங்கு அமல்: நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 13 July 2020 8:35 AM IST (Updated: 13 July 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

நாகப்பட்டினம்,

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகை கடைத்தெரு, நீலா விதிகள், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கின் போது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றிதிரிந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். அனாவசியமாக சாலைகளில் சுற்றிதிரிபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

முழு ஊரடங்கு காரணமாக நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீன் விற்பனை நடைபெறவில்லை. இதனால் மீன்பிடி இறங்கு தளம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் முழு ஊரடங்கையொட்டி வேளாங்கண்ணி பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மெயின் சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. முழு ஊரடங்கால் வேளாங்கண்ணி சர்ச் சாலை, கடற்கரை சாலை, கடற்கரை, பேராலய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காட்சி அளித்தது.

மயிலாடுதுறை பகுதியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் பங்குகள், இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. இதேபோல் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில், மங்கநல்லூர், மணல்மேடு, குத்தாலம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

வேதாரண்யம் பகுதிகளில் மருந்துகடைகள், பால்கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அப்போது போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் உப்பு ஏற்றுமதிக்கு வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் வேதாரண்யம் பஸ் நிலையம் வெறிசோடி காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நேற்று 2-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் கடைவீதியில் ஜவுளி கடை, நகை கடை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் நேற்று முழு ஊரடங்கு காரணமாக ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளித்தது.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே மக்கள் அலைமோதும் மீன், இறைச்சி கடைகள் கூட நேற்று திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் பங்குகளும் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே வழக்கம் போல் இயங்கின. நகராட்சி, வருவாய்துறையினர் மற்றும் போலீசார் நேற்று முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

Next Story