குன்னூர் ஏல மையம்: தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.12 உயர்வு


குன்னூர் ஏல மையம்: தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.12 உயர்வு
x
தினத்தந்தி 13 July 2020 9:45 AM IST (Updated: 13 July 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.12 உயர்ந்தது.


குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர்.

பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த தேயிலைத்தூளானது குன்னூரில் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை இலை ரக தேயிலைத்தூளும், வெள்ளிக்கிழமை டஸ்ட் ரக தேயிலைத்தூளும் ஏலம் விடப்படுகிறது. அதன்படி கடந்த 9, 10-ந் தேதிகளில் நடைபெற்ற ஏலத்துக்கு 20 லட்சத்து 45 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 15 லட்சத்து 45 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 5 லட்சம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 19 லட்சத்து 38 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 95 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.24 கோடியே 86 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.12 விலை உயர்வு ஏற்பட்டது.

அதாவது சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.315, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.240 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.96 முதல் ரூ.141 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.113 முதல் ரூ.305 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.89 முதல் ரூ.128 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.165 முதல் ரூ.264 வரையும் விற்பனையானது. அடுத்த ஏலம் வருகிற 16, 17-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 25 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.


Next Story