ஊட்டி அருகே சூட்டிங் மட்டத்துக்கு புதிய அலங்கார வளைவு


ஊட்டி அருகே சூட்டிங் மட்டத்துக்கு புதிய அலங்கார வளைவு
x
தினத்தந்தி 13 July 2020 9:53 AM IST (Updated: 13 July 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சூட்டிங் மட்டத்துக்கு புதிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் என்ற சுற்றுலா தலம் உள்ளது. இது வனத்துறையின் கீழ் தோடர் இன மக்கள் அடங்கிய சூழல் மேம்பாட்டு குழு மூலம் செயல்பட்டு வருகிறது.

இயற்கையாகவே புல்வெளிகளை கொண்ட மலைப்பகுதி, அங்கிருந்து பார்த்தால் பசுமையான வனப்பகுதிகள், நீர்நிலைகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். இங்கு தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழி சினிமா படப்பிடிப்புகள் நடந்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனிப்பொழிவால் புல்வெளிகள் கருகின.

சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் புல்வெளிகள் பசுமைக்கு மாறியது. அங்கு வளைந்து, நெளிந்து செல்லும் பாதை சுற்றுலா பயணிகளை கவருகிறது. நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி அறிவுரையின்பேரில் சூட்டிங்மட்டத்தில் புதிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கிலும் சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் நுழைவாயில் பகுதியில் தோடர் இனத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் சுற்றுலா பயணிகளை கை கூப்பி வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீலகிரி வனப்பகுதியில் வாழும் வரையாடு, சிறுத்தைப்புலி, மலபார் அணில் மற்றும் பறவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

அது இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கட்டப்படும் தோடர் வீட்டிற்குள் சென்று வருவது போல் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் அங்கு பணிபுரிந்து வந்த சூழல் மேம்பாட்டு குழுவினர் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சோலை மரக்கன்றுகள் நர்சரியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதனை நட்டு பராமரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிக்கு உகந்த மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சோலை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story