தளர்வில்லா முழு ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை சாலைகள்


தளர்வில்லா முழு ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை சாலைகள்
x
தினத்தந்தி 13 July 2020 11:30 AM IST (Updated: 13 July 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகர சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

மதுரை,

மதுரையில் தற்போது 300-க்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியங்களில் கடந்த 24-ந் தேதி முழு ஊரடங்கை அறிவித்தது. 30-ந் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் 12-ந் தேதி (நேற்று) வரையும், அதனையும் தற்போது 14-ந் தேதி (நாளை) வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

எனவே நாளை வரை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்து இருக்கும். மற்ற எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை. ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு அனுமதி கிடையாது.

இதற்கிடையில் ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழகம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மருந்தகங்கள் மற்றும் பால் கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் கூட அடைக்கப்பட்டு இருந்தன.

மக்களும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்கள் அதிகம் செல்லும் மதுரை கோரிப்பாளையம், காளவாசல், காமராஜர் சாலை பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி காட்சி அளித்தன.

மதுரை நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். தேவையில்லாமல் சுற்றி திரிந்த சிலரை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கொரோனா குறித்து விழிப்புணர்வும், அச்சமும் நிலவுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

நாளை மறுநாள் (15-ந் தேதி) முதல் மதுரையில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதில் ஏதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

Next Story