பெரம்பலூர் அருகே விஷவாயு தாக்கி கிணற்றில் விழுந்த வாலிபர் சாவு; மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் பலி - மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை


பெரம்பலூர் அருகே விஷவாயு தாக்கி கிணற்றில் விழுந்த வாலிபர் சாவு; மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் பலி - மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 13 July 2020 12:28 PM IST (Updated: 13 July 2020 12:28 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே விஷவாயு தாக்கி விவசாய கிணற்றில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார். மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் பலியானார். மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (வயது 50) மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அதில் விவசாயம் செய்வதற்காக சுமார் 60 அடி ஆழத்தில் கிணறு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் கிணற்றில் தண்ணீர் ஊற்று எடுக்கவில்லை என்ற காரணத்தால், கிணற்றின் பக்கவாட்டில் சுமார் 200 அடி ஆழத்திற்கு துளையிட்டு (சைடுபோர்) அதில் நேற்று மதியம் வெடி வைத்து தண்ணீர் ஊற்றெடுக்க வழி செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராதாகிருஷ்ணன்(27) மற்றும் பெரியசாமி மகன் பாஸ்கர்(26) ஆகியோர் அந்த கிணற்றில் தண்ணீர் ஊறியுள்ளதா? என பார்க்க சென்றனர். அப்போது முதலில் கயிற்றின் மூலம் ராதாகிருஷ்ணன் கிணற்றின் உள்ளே இறங்கி பாதி தூரத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது வெடியின் விஷவாயு உள்ளே இருந்தது. அதனை அவர் சுவாசித்ததால் மயங்கி கிணற்றில் விழுந்தார். இந்த நிலையில் மேலே இருந்த பாஸ்கர், ராதாகிருஷ்ணன் உள்ளே சென்று வெகுநேரம் ஆகிறதே என்று அவரும் உள்ளே இறங்கி சென்றுள்ளார். அப்போது அவரும் மயங்கி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து கிணறு பக்கம் சென்ற ராதாகிருஷ்ணனும், பாஸ்கரும் வெகுநேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார்(36), பால்ராஜ், தனபால் ஆகிய 3 பேரும் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, பாஸ்கரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் ராதாகிருஷ்ணனை தேடிக்கொண்டு இருந்தபோது, தீயணைப்பு வீரர் ராஜ்குமார் விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார். மற்ற 2 பேரும் அரை மயக்கத்துடன் மேலே ஏறி வந்தனர். உடனே அவர்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து மாற்று குழுவினர் கிணற்றில் இறக்கப்பட்டு ராஜ்குமாரை வெளியே கொண்டு வந்தனர். அப்போது இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த அழகப்பன் மகன் மற்றொரு முருகேசன்(27) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தொடர்ந்து ராதாகிருஷ்ணனை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ராதாகிருஷ்ணனை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த தீயணைப்பு துறையின் திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜய்குமார், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story