போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் போலீசாருக்கு அதிகாரி அறிவுரை


போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் போலீசாருக்கு அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 13 July 2020 2:17 PM IST (Updated: 13 July 2020 2:17 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுரை வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய உட்கோட்ட எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி ஆயுதபடை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கலந்து கொண்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசியதாவது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 4 உட்கோட்ட காவல் எல்லைக்குள் 25 போலீஸ் நிலையங்கள், தர்மபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு ஆகிய இடங்களில் 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 10 சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கடமை தவறாமல் சிறப்பாக பணியாற்ற வேண்டும். போலீஸ் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கின்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிரமாக கண்காணித்து இ-பாஸ் உள்ளவர்களை மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து எந்த புகாரும் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story