கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை
கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர் களுடன் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கலெக்டர்களுடன் ஆலோசனை
இதில் பெங்களூருவில் இந்த வைரசால் 18 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி முதல் 22-ந் தேதி காலை 5 மணி வரை 7 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெங்களூருவை தவிர்த்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களான தட்சிண கன்னடா, பல்லாரி, பீதர், உடுப்பி, மைசூரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசை தடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-
ரேபிட் பரிசோதனை
குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடத்த முன்னுரிமை வழங்க வேண்டும். 1 லட்சம் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த கருவிகளை பிரித்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவசர நேரத்தில் இந்த கருவிகளை பயன்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், தட்சிணகன்னடா, தார்வார், பல்லாரி, உடுப்பி, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
பீதர், கதக், தார்வார், மைசூரு ஆகிய மாவட்டங்களில் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டில் அதிகமான மரணங்கள் நிகழும் முதல் 5 மாவட்டங்களில் பீதர் இடம் பெற்றுள்ளது.
அனுமதி வழங்கக்கூடாது
இதுவரை நடந்த மரணங்கள் குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சுகாதாரத்துறையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தால் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக் கொள்ளுங்கள்.
வெளியூரில் இருந்த வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. பெங்களூருவில் கொரோனா மற்றும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரமான நோய்
தனிமைப்படுத்துதல், தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், வீடு வீடாக சென்று நோய் குறித்து ஆய்வு செய்தல் போன்றவற்றுக்கு பூத் மட்டத்தில் குழுக்களை அமைக்க வேண்டும். உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற தீவிரமான நோய் உள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும். காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மூடி சீல் வைக்க வேண்டும். அந்த பகுதிகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
படுக்கைகளில் பற்றாக்குறை
வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க வேண்டும். கொரோனா ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸ் மற்றும் சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் சுவாசக்குழாயில் வைரஸ் ஏற்பட்டிருப்பதை விரைவாக கண்டறிய முடியும்.
அதனால் இந்த உபகரணங்களை பயன்படுத்தி வைரசை கண்டறிய முன்னுரிமை அளிக்க வேண்டும். கொரோனா உயிர்க்கொல்லி நோய் அல்ல, மக்கள் பயப்பட தேவை இல்லை என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வெள்ளம் குறித்து எச்சரிக்கை
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்று தங்கவைக்க பாதுகாப்பான இடத்தை முதலில் கண்டறிய வேண்டும். மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்ட கலெக்டருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து விவரங்களை பெற வேண்டும்.
ராஜாப்பூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை கண்காணிக்க நமது மாநிலத்தை சேர்ந்த ஒரு என்ஜினீயரை நியமிக்க வேண்டும். வருகிற அக்டோபர் மாதம் வரை நல்ல மழை பெய்யும் நிலை உள்ளது. வெள்ளம் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நல்ல மழை பெய்வதால், உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவற்றுக்கான சந்தை தற்போது குறைவாக இருக்கிறது. அதனால் அந்த தானியங்களை கிடங்குகளில் சேமித்து வைக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
கலெக்டர்களே முடிவு செய்யலாம்
இந்த கூட்டத்தில் சில கலெக்டர்கள் பேசும்போது, ஊரடங்கு வேண்டாம் என்று கூறினர். சிலர் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பேசினர். கொரோனாவை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறினர்.
இதற்கு எடியூரப்பா, கொரோனா வைரசை தடுக்க மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து நான் எந்த உத்தரவும் பிறப்பிக்க மாட்டேன். ஊரடங்கால் கொரோனா குறைந்துவிடும் என்று நான் கருதவில்லை. ஆனால் உள்ளூர் அளவில் கொரோனா பரவலின் அடிப்படையில் அதை தடுக்க நீங்களே (கலெக்டர்கள்) ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கி உத்தரவிட்டார்.
தட்சிணகன்னடா மாவட்டம்
முன்னதாக தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சிந்து பி.ரூபேஷ் பேசும்போது, கொரோனாவை கட்டுப்படுத்த எங்கள் மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெலகாவி உள்ளிட்ட வேறு சில மாவட்ட கலெக்டர்கள், மாவட்டம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதை விட, மராட்டிய மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள தாலுகாக்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் போதும் என்றார். இருப்பினும் மாவட்டம் முழுவதும் அங்கு ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், முதல்-மந்திரியின் செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story