தூத்துக்குடியில் புதிதாக 122 பேருக்கு தொற்று: நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி தென்காசியில் 39 பேர் பாதிப்பு


தூத்துக்குடியில் புதிதாக 122 பேருக்கு தொற்று: நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி தென்காசியில் 39 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2020 4:30 AM IST (Updated: 13 July 2020 11:20 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் புதிதாக 122 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் புதிதாக 122 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

நெல்லையில் 118 பேர்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று 118 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. இதில் 113 பேருக்கு உள்ளூர் சமூக பரவலாகவும், வெளியூர்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,875-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று 868 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 53 பேர் குணமடைந்து உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 42 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 11 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

போலீஸ்காரர்

மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர் பெருமாள்புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதையொட்டி மேலப்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் பெருமாள்புரம் போலீஸ் குடியிருப்பில் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி உடனடியாக பூட்டப்பட்டது. வங்கி வளாகத்தில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

இதேபோல் மாநகரில் வண்ணார்பேட்டை, கே.டி.சி. நகர், மகாராஜ நகர், அரசு மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர் விடுதி, அண்ணா நகர், சமாதானபுரம், பேட்டை, டவுன் பகுதிகளுக்கும் கொரோனா பரவி உள்ளது. மாவட்டத்தில் அம்பை, களக்காடு, வள்ளியூர், சேரன்மாதேவி, நாங்குநேரி, பாப்பாக்குடி, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 4 பேர் பலி

நெல்லையில் இதுவரை 15 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் வியாபாரம் செய்து வந்த சுத்தமல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் மேலப்பாளையத்தை சேர்ந்த 77 வயது முதியவர், களக்காடு பகுதியை சேர்ந்த 88 வயது மூதாட்டி ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகினர். இதுதவிர விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 721-ஆக உயர்ந்துள்ளது.

இதில் 325 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 394 பேர் தென்காசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

122 பேருக்கு தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

6 சுகாதார பணியாளர்கள், ஒரு பயிற்சி டாக்டர் மற்றும் உடன்குடி, ஆறுமுகநேரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,385-ஆக அதிகரித்து உள்ளது.

Next Story