குமரி மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர வேண்டும் கலெக்டரிடம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
குமரி மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர வேண்டும் என்று கலெக்டரிடம், வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
நாகர்கோவில்,
குமரி மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர வேண்டும் என்று கலெக்டரிடம், வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
கலெக்டரிடம் மனு
வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆகியோர் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பிறகு வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி கிழக்கு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்கள் கன்னியாகுமரியில் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மேற்கு மாவட்டத்தில் பரிசோதனை செய்பவர்கள் மேற்கு மாவட்ட பகுதியில் தங்க வசதி குறைவாக உள்ளது. அவர்களுக்கும் தங்கும் வசதி செய்ய வேண்டும் என கூறினோம். அதற்கு கலெக்டர் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் தங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
தரமான உணவு
கொரோனா நோயாளிகளுக்கு உணவு சரியான நேரத்திற்கு கொடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உணவு தரமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவுகள் தரமாக வழங்க வேண்டும் என கூறினோம். அதற்கு தரம் உயர்த்தி உணவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் 31-ந் தேதியுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைகிறது. அங்கு குமரி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி பெற்றுதர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதற்கு அரசு முடிவு செய்யும் என கூறினார்.
குமரி மாவட்டத்தில் 200-க்கு மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் உள்ளனர். தாங்களும் கொரோனா பரிசோதனை செய்ய தனியாக வார்டு ஒதுக்க வேண்டும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறியுள்ளனர் என கூறினோம். அதற்கு அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். ஈரான் நாட்டில் இருந்து வந்த மீனவர்களுக்கும், குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கும் வாழ்வாதாரத்தை பெருக்க பைபர் படகு வாங்க அரசு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.
மீனவர்கள்
நாகர்கோவில் மாநகர பகுதியில் சுவரொட்டி ஒட்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் செய்யும் சாதனைகளை சுவரொட்டி ஒட்டுவதன் மூலம் தான் மக்களுக்கு தெரியும். எனவே சுவரொட்டி ஒட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஈரானில் உள்ள 5 மீனவர்களில் 4 பேர் சொந்த பணம் கொடுத்து வருகிற 15 அல்லது 16-ந் தேதி வருகிறார்கள். மீதமுள்ளவர்களில் சிலர் அங்கு மீன்பிடிக்க முடிவு செய்துள்ளனர். சிலர் சொந்த ஊருக்கு வருவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர்.
குமரி மாவட்ட மீனவர்களை ஈரானில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்தது போல், மீதமுள்ளவர்களையும் கொண்டுவருவதற்கு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாகர்கோவிலில் காமராஜர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும். காமராஜருக்கு புதிய சிலை அமைக்க வேண்டும் என கூறியுள்ளோம். இந்த பிரச்சினையை இந்த நேரத்தில் பெரிய பிரச்சினையாக ஆக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story