குமரியில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி


குமரியில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 14 July 2020 4:00 AM IST (Updated: 13 July 2020 11:51 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியானார். புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியானார். புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று படுவேகமாக அதிகரித்து வருகிறது. முதலில் மாவட்டத்தில் 5 பேரில் தொடங்கிய கொரோனா தொற்று ஒற்றை இலக்கம், இரட்டை இலக்க எண்ணிக்கையில் மெல்ல, மெல்ல நகர்ந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 இலக்க எண்ணிக்கையில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

முதலில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கண்டறியப்பட்ட தொற்று, அதன்பிறகு அவர்கள் குடும்பத்தினர், நெருங்கி பழகியவர்கள் என பரவியது. தற்போது கிராமங்கள், நகரங்கள் என மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

உயிரிழப்பும் அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாகர்கோவில், மணிக்கட்டி பொட்டல், தூத்தூர், சின்னத்துறை, குளச்சல், வாணியக்குடி, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, சுசீந்திரம், வடசேரி, கோட்டார் என பல்வேறு பகுதிகளில் காலடித்தடங்களை அழுத்தமாக பதித்துள்ளது. இதனால் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் உயர்கிறது.

அதேநேரத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1457 ஆக இருந்தது. இந்த தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஏற்கனவே அச்சத்தில் உறைந்திருக்கும் குமரி மாவட்ட மக்களை மேலும் மிரட்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று 2 பேர் கொரோனாவுக்கு பலியானார். அதன் விவரம் வருமாறு:-

மூதாட்டி சாவு

தோவாளை பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் பல்வேறு நோய்த்தொற்று காரணமாக நீண்டநாட்களாக படுத்த படுக்கையாக கிடந்தார். அவருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கொரோனா சிகிச்சை வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை 8.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். இதேபோல் தக்கலை பரைக்கோடு பகுதியை சேர்ந்த 70 வயது முதியவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானார். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

1572 பேருக்கு தொற்று

அதேபோல குமரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று 115 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 75 பேர் ஆண்கள், 35 பேர் பெண்கள், 5 சிறுவர்கள் ஆவர்.

இதனால் குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1572 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 62 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story