நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி மூலம் கலெக்டர் ஷில்பா ஆலோசனை


நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி மூலம் கலெக்டர் ஷில்பா ஆலோசனை
x
தினத்தந்தி 14 July 2020 5:00 AM IST (Updated: 14 July 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷில்பா நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷில்பா நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சியில் ஆலோசனை

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷில்பா, தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் மாவட்டத்தில் உள்ள அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி மண்டல ஆணையாளர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், மாநகராட்சி ஆணையாளர், உதவி கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆகியோர் இந்த காணொலி காட்சி ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் ஷில்பா பேசுகையில் கூறியதாவது:-

தீவிர நடவடிக்கை தேவை

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக நடைபெற்று வருகிறது. அதை தீவிரப்படுத்தும் வகையில் கிராமம் மற்றும் நகர் பகுதியில் வசிக்கும் அனைவரையும் கண்காணித்திட வீடு, வீடாக சென்று அனைவருக்கும் சளி, காய்ச்சல், இதர நோய்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதனை அனைத்து நிர்வாக அலுவலர்களும் கண்காணித்து முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கெடுக்கும் பணியாளர்களிடம், முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் போன்ற பல்வேறு நோயால் அவதிப்படும் நபர்களின் தகவல்களை துல்லியமாக கணக்கெடுக்க அறிவுறுத்த வேண்டும்.

கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும். கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story