தமிழில் எழுத வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலக மனு பெட்டியை அகற்ற முயன்றதால் பரபரப்பு
தமிழில் எழுத வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலக புகார் மனு பெட்டியை அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
தமிழில் எழுத வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலக புகார் மனு பெட்டியை அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனு பெட்டி
தமிழர் விடுதலைக் கொற்றம் தலைவர் வியனரசு தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு கேட் அருகில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியை அகற்றப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெட்டியில் மனு போட முடியாது, அந்த பெட்டி தொடர்பாக ஆட்சியாளர்களை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து போலீசார் வியனரசுவை கலெக்டர் அலுவலகம் உள்ளே அழைத்துச்சென்று மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளை சந்தித்து மனு கொடுக்கச் செய்தனர்.
அவரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் போது மக்கள் தங்களது பிரச்சினைகளை கலெக்டரிடம் விண்ணப்பங்களாக கொடுத்து தீர்வு பெறுவார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இருந்து தொடர்ச்சியாக மக்கள் குறைதீர் கூட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் மக்கள் தங்கள் குறைகளை களைவதற்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வரவேண்டிய தவிர்க்க முடியாத சூழலில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி கலெக்டர் மீதும் அரசு ஊழியர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு வரும் மக்களை அன்போடும், மதிப்போடும் நடத்த வேண்டிய அதிகாரிகள், கொரோனா தொற்றை காரணம் காட்டி மக்கள் கொண்டு வரும் மனுக்களை போடும் பெட்டியை கலெக்டர் அலுவலக வளாக வாசல் தரையில் போட்டு உள்ளனர். அதேபோல் விண்ணப்பங்களை போடும் பெட்டியில் ஏழை, எளிய மக்கள் யாருக்கும் தெரியாக, புரியாத ஆங்கில மொழியில் தேர்தல் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது. இது ஆட்சிமொழி சட்டத்தை மீறும் செயல் ஆகும்.
தமிழில் எழுத வேண்டும்
எனவே கலெக்டர் அலுவலக வளாக உள்பகுதியில் நிழல்குடை அமைத்து மேஜை போட்டு அதன் மீது மக்கள் குறைதீர் விண்ணப்ப பெட்டி என தமிழில் எழுதி அறிவிப்பு பலகையும் அமைக்க வேண்டும். அதன் அருகில் கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் அரசு ஊழியரை நியமித்து மனுக்களை போடுவதற்கு உதவியாகவும், மாலையில் மனுக்களை சேகரிப்பதற்கும் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த கோரிக்கை வைத்த சிறிது நேரத்தில், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் தேர்தல் தொடர்பாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் மீது வெள்ளை காகிதத்தை ஒட்டினார்கள். மேலும் புகார் மனு பெட்டி என்று அச்சிடப்பட்ட காகிதத்தையும் ஒட்டினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
குண்டும் குழியுமான ஸ்ரீபுரம் ரோடு
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அவர்கள் மனு பெட்டியில் போட்ட மனுவில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து நயினார்குளம் கரை வரை உள்ள ரோடு கடந்த 6 மாத காலங்களுக்கு மேல் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்வதற்கு தகுதி இல்லாத வகையில் உள்ளது. அந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது எழுகிற மண் தூசிகளாலும், புழுதியாலும் சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்கள் நடமாடுவதற்கு, செல்வதற்கு அச்சப்படுகிற நிலையும், உடல் நலத்துக்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது. எனவே கலெக்டர் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைப்பு செய்து மக்கள் நலன் காக்க வேண்டும். இல்லை என்றால் விரைவில் மக்களை திரட்டி ஸ்ரீபுரம் ரோட்டில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
டீ குடிக்கும் போராட்டம்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நின்று டீ குடித்து போராட்டம் நடத்தினர். அவர்கள் கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்ட மனுவில், நெல்லை மாவட்டத்தில் அனைத்து வியாபார நிறுவனங்களும் காலை முதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது. ஆனால் மாநகரில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்பட கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் டீக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கட்டுப்பாட்டை தளர்த்தி மாலை 6 மணி வரை டீக்கடை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் கொடுத்த மனுவில், “இந்து தெய்வங்களை, பக்தி நூல்களை தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்“ என்று கூறிஇருந்தார்.
மக்கள் போராட்டக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் நெல்சன் தலைமையில் கொடுத்த மனுவில், “நாங்குநேரி யூனியன் கரந்தாநேரியில் அங்கன்வாடி மையத்தை சரியாக செயல்படுத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story