குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு வாலிபர் செல்பி எடுத்தார்.
குடகு,
குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு வாலிபர் செல்பி எடுத்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் யானையிடம் இருந்து உயிர் தப்பினார்.
செல்பி மோகம்
தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த அளவுக்கு பயன் உள்ளதோ அதே அளவுக்கு அது பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபகாலமாக செல்பி புகைப்படம் எடுப்பதில் பலருக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் வனவிலங்குகள், ஓடும் ரெயில் முன்பு செல்பி எடுக்க ஆசைப்பட்ட பலர் தங்களது உயிர்களை இழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில் கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் துரத்திய காட்டு யானை முன்பு வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஓடி வரும் காட்டு யானை
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில், பூனத்முட்டே கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் புகுந்து அடிக்கடி காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. சிலரை காட்டு யானை தாக்கியும் உள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனத்முட்டே கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த காட்டுயானை வேகமாக ஓடி வருகிறது. அப்போது ஆட்டோவில் சென்ற ஒரு இளைஞர் யானை ஓடி வருவதையும், அதனால் ஏற்படும் ஆபத்தையும் உணராமல் தனது செல்போனில் யானை துரத்தி ஓடி வருவதை செல்பி வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
ஆனால் அந்த யானை, வாலிபர் நின்ற திசை நோக்கி வராமல் கண் இமைக்கும் நேரத்தில் மாற்று வழியில் தலைக்தெறிக்க ஓடிவிட்டது. இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இல்லையெனில் அவர் யானையிடம் சிக்கி இருப்பார். இதுதொடர்பான வீடியோ காட்சியை சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை காண்போரை காட்டு யானை ஓடி வரும் காட்சியும், அதை பொருட்படுத்தாமல் வாலிபர் செல்பி எடுப்பதும் நெஞ்சை பதற வைத்து வருகின்றன.
Related Tags :
Next Story