ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்


ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்
x
தினத்தந்தி 14 July 2020 4:30 AM IST (Updated: 14 July 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பெங்களூருவை காலி செய்துவிட்டு வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள்.

பெங்களூரு, 

ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பெங்களூருவை காலி செய்துவிட்டு வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள்.

800 பஸ்கள் இயக்கம்

பெங்களூருவில் கொரோனா வைரசை தடுக்க இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி முதல் 22-ந்தேதி அதிகாலை 5 மணி வரை ஒரு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூருவில் இருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள், பிழைப்பு தேடி இங்கு வந்தவர்கள், மீண்டும் பெட்டி-படுக்கைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

பலர் பெங்களூருவை காலி செய்துவிட்டு நேற்று பஸ்களில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சொந்த திரும்ப வசதியாக கூடுதலாக 800 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் வெளியூர் செல்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

பலர் மீண்டும் பெங்களூரு வரக்கூடாது என்ற முடிவில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா பீதி காரணமாக கடந்த வாரமே லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். மேலும் ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். வெளியூர்க்காரர்கள் பெங்களூருவை காலி செய்து வருவதால், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.

இங்கிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது. மேலும் அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றும்...

பெங்களூருவில் முழு ஊரடங்கு இன்று இரவு 8 மணிக்கு தான் தொடங்குகிறது. இதனால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் வசித்து வரும் வெளிமாநிலத்தினர் சொந்த ஊர் செல்ல பெட்டி, படுக்கைகளை தயார் செய்து வருகிறார்கள்.

இன்றும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூரு மாநகராட்சியும், அரசு போக்குவரத்து கழகமும் அங்கு பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

நடைபயணமாக சென்ற தமிழர்கள்

அதுபோல் பெங்களூருவில் வசித்து வரும் தமிழர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் நடைபயணமாக பெங்களூருவில் இருந்து ஓசூர் எல்லையில் உள்ள அத்திபெலே சோதனை சாவடியை கடந்து ஓசூருக்கு சென்றனர். அதில் பெரும்பாலானோர் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருபவர்கள் ஆவர். மேலும் சிலர் குடும்பத்துடன் மூட்டை, முடிச்சுகளை நடந்தே சென்றதையும் காண முடிந்தது.

Next Story