உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆதரவற்றவரின் உடலை ஆம்புலன்சில் தூக்கிவைத்த கவுன்சிலர்
பெங்களூருவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆதரவற்றவரின் உடலை ஆம்புலன்சுக்கு பூங்காவில் இருந்து மாநகராட்சி கவுன்சிலர் தூக்கி சென்றார்.
பெங்களூரு,
பெங்களூருவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆதரவற்றவரின் உடலை ஆம்புலன்சுக்கு பூங்காவில் இருந்து மாநகராட்சி கவுன்சிலர் தூக்கி சென்றார். கொரோனா பீதிக்கு மத்தியில் இந்த மனிதநேயமிக்க சம்பவம் நடந்துள்ளது.
பூங்காவில் உடல்
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு கொரோனா பீதியில் சிகிச்சை அளிக்க மறுத்து வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்படும் பலர் உயிர் இழக்கும் சம்பவங்களும் பெங்களூருவில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அத்துடன் கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதிலும், அடக்கம் செய்வதிலும் சுகாதாரத் துறை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூரு மல்லசந்திராவில் உள்ள பூங்காவில் ஒரு நபர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். ஆதரவற்றவரான அவரது உடல் பூங்காவில் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அந்த உடலின் அருகே செல்லவும் மக்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி அப்பகுதி வார்டு கவுன்சிலரான லோகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் ஆம்புலன்ஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அந்த பூங்காவுக்கு சென்ற கவுன்சிலர் லோகேஷ், அந்த நபரின் உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
கவுன்சிலர் தூக்கி வைத்தார்
ஆம்புலன்ஸ் வந்ததும் உடலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டிரைவர் முயன்றார். ஆனால் அவருக்கு உதவ அங்கு யாரும் வரவில்லை. மாநகராட்சி ஊழியரும் அங்கு வருவதற்கு தாமதமானது. இதையடுத்து, கொரோனா தடுப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு அந்த நபரின் உடலை பூங்காவுக்குள் இருந்து கவுன்சிலர் லோகேஷ் மற்றும் வெளியே தூக்கி வந்தார்கள். பின்னர் ஆம்புலன்சில் உடலை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து கவுன்சிலர் லோகேஷ் நிருபர்களிடம் கூறுகையில், “பூங்காவுக்குள் ஆதரவற்ற ஒருவர் இறந்து கிடந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அந்த நபரின் உடலை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தேன். இந்த வார்டில் கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்கள், பிற தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்ததால், பூங்காவுக்கு வரதாமதமானது. அதன் காரணமாக நானே கவச உடைகளை அணிந்து கொண்டு அந்த நபரின் உடலை தூக்கி சென்று ஆம்புலன்சில் அனுப்பி வைத்தேன். பூங்காவுக்குள் ஆதரவற்ற நபரின் உடல் கிடப்பதால் மக்களுக்கு கொரோனா பீதி ஏற்பட்டது. இதனால் உடனடியாக நானே உடலை ஆம்புலன்சில் தூக்கி வைத்தேன்” என்றார்.
பாராட்டு
கொரோனா பீதிக்கு மத்தியில் உடல் நலக்குறைவால் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்ல சுகாதாரத் துறை ஊழியர்களே பயந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆதரவற்றவரின் உடலை ஆம்புலன்சில் தூக்கிவைத்து மனிதநேயமிக்க வகையில் செயல்பட்ட கவுன்சிலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story