சந்தேகம் இருப்போருக்கு கதிர்காமம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்
கொரோனா பாதிப்பு குறித்து சந்தேகப்படுபவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
கொரோனா பாதிப்பு குறித்து சந்தேகப்படுபவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
பரிசோதனை முகாம்
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 600 படுக்கை வசதிகள் இருந்தாலும் கூட தூய்மைப் பணியில் பிரச்சினை வருகிறது. அதனால் 100 கொரோனா நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றுவதற்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அறிகுறி தெரியாத கொரோனா தொற்று உள்ள 25 நோயாளிகளை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒதியஞ்சாலை சுகாதார நல வழி மையம் சார்பில் ஜவகர் பால் பவனில் இன்று (நேற்று) நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இங்கு சனிக்கிழமை வரை பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில் இடம் பெறாத பகுதிகளுக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கூறும் இடத்தில் பரிசோதனை முகாம் நடத்த சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
தொற்று சந்தேகம்
நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 1,505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 2,149 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். காரைக்காலில் 1,728, ஏனாமில் 2,354, மாகியில் 2,560 என பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த வகையில் தேசிய சராசரியை விட அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடக்கின்றன.
இதை 4 ஆயிரம் வரை அதிகரிக்கவும் தயாராக உள்ளோம். பரிசோதனை செய்துகொள்வதற்கு யார் வந்தாலும் திருப்பி அனுப்புவதில்லை. காய்ச்சல், சளி இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே பெரும்பாலான நேரம் வீட்டிலேயே இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே செல்லுங்கள். வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story