3 மாதங்களுக்கு பின்னர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கடைகள் திறப்பு
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 260 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
வேலூர்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 260 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தடுப்பு நடவடிக்கை
வேலூர் மாநகரின் முக்கிய வியாபார மையமான நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கடைகளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 3 மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டன. நேதாஜி மார்க்கெட் மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லரை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக இயங்கி வருகின்றன. மேலும் பூக்கடைகள் ஊரீசு பள்ளி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
வணிகர் சங்கத்தினரின் கோரிக்கையின் பேரில் லாங்குபஜார், சுண்ணாம்புகார தெரு, மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் கடைகள் திறக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அனுமதி அளித்தார். இதேபோன்று நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளையும் திறக்க அனுமதிக்க வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
260 கடைகள் திறப்பு
அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த 11-ந் தேதி நேதாஜி மார்க்கெட்டில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள காய்கறி, பழம், பூக்கடைகளை தவிர மீதமுள்ள கடைகளை நேற்று முதல் திறக்க கலெக்டர் அனுமதி அளித்தார். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை விற்பனை செய்யும்படி அறிவுறுத்தினார்.
அதன்படி சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள் நேற்று காலை வியாபாரிகள் திறந்து வியாபாரம் செய்தனர்.
மளிகை, பாத்திரம், மண்பாண்டம், ஜவுளி, வெற்றிலை-பாக்கு, குங்குமம், விபூதி கடைகள் உள்பட 260 கடைகள் திறக்கப்பட்டிருந்தன. நேதாஜி மார்க்கெட்டில் வழக்கமாக காணப்படும் மக்கள் கூட்டம் நேற்று காணப்படவில்லை. குறைந்த அளவு பொதுமக்களே வந்து பொருட்களை வாங்கி சென்றனர். கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா?, கடை வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்று வடக்கு போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ரோந்து சென்று கண்காணித்தனர்.
Related Tags :
Next Story