கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு


கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 July 2020 4:53 AM IST (Updated: 14 July 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனியார் கடன் திட்டம் மூலமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் வசூலிக்கப்படும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் வசூலிக்கப்படும். சுயஉதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். திட்ட அதிகாரியால்(மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன்தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு ரூ.15 லட்சம் கடன் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். கறவை மாடு 2 வாங்க ரூ.60ஆயிரம் கடனுதவி வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.ஆழ்குழாய் கிணறு அமைத்து பாசன வசதி செய்ய அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் மற்றும் அதற்கு இணையாக 50 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கப்படும். சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று , கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் தகுதியுடையவர்கள் இந்த திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

Next Story